"வண்டியை நிறுத்துடா..." உயிரை பணயம் வைத்து லாரியைத் தடுத்த போலிஸ்! கொடூரமாக இழுத்து சென்ற லாரி ஓட்டுநர்!

 
1

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில், சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற லாரியைத் தடுக்க முயன்ற காவலரை, சுமார் 1 கிலோமீட்டர் தூரம் லாரியிலேயே இழுத்துச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் (Mhaswad) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில், காவலர் மகாவீர் கோகரே தனது இருசக்கர வாகனத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எவ்வித பதிவு எண்ணும் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த டம்ப்பர் லாரி ஒன்றை அவர் கவனித்தார்.

சந்தேகமடைந்த காவலர் மகாவீர் கோகரே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, லாரியை நிற்குமாறு சைகை காட்டினார். லாரி நின்றதும் அதனைச் சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட மணல் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.

காவலர் மகாவீர் கோகரே மணல் கடத்துவதற்கான உரிய அனுமதிப் பத்திரத்தைக் கேட்டபோது, லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென வாகனத்தை ஸ்டார்ட் செய்து தப்பியோட முயன்றபோது, காவலர் கோகரே லாரியின் கதவுப் பகுதியைப் பிடித்துத் தடுக்க முயன்றார்.

ஆனால், லாரியை நிறுத்தாத ஓட்டுநர், காவலர் கதவைப் பிடித்திருந்த நிலையிலேயே வாகனத்தின் வேகத்தை அதிகரித்து, சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையிலேயே அவரை இழுத்துச் சென்றுள்ளான்.

இந்த கொடூர சம்பவத்தில் தீவிர காயமடைந்த காவலர் மகாவீர் கோகரே, அப்பகுதி மக்கள் மற்றும் சக காவலர்களின் உதவியுடன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் காவலர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மஸ்வத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாக அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள மணல் மாஃபியா கும்பல் மற்றும் லாரியின் உரிமையாளர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.