ரயிலுக்குள் பறந்துவந்த கல்... பதற்றத்தில் பயணிகள்! 4 வயது சிறுவன் படுகாயம்
செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு ரயிலில் வந்த குடும்பத்தினர் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 வயது சிறுவன் காயமடைந்தார்.

நெல்லை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவர் தனது குடும்பத்தோடு இன்று தென்காசி செங்கோட்டையிலிருந்து பயணிகள் ரயில் மூலமாக நெல்லைக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ரயில் தென்காசி ரயில் நிலையத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்பாக வந்த பொழுது திடீரென ஜன்னல் ஓரத்தில் இருந்தவர்களை அந்தப் பகுதியில் நின்ற சிறுவர்கள் சிலர் கற்களால் தாக்கினார். அந்த நேரத்தில் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டிருந்த இப்ராஹிமின் 4 வயது மகனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது.
இதனால் செய்வதறியாது தவித்த அந்த குடும்பத்தினர் அருகில் இருந்தவர்களிடம் மருந்து வாங்கி தேய்த்து சிறுவனை ஆசுவாசப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்தது தொடர்பாக இப்ராஹிம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

