ஸ்டெர்லைட் போராட்டம் - கூடுதல் நிவாரணம் அறிவிப்பு..!

 
1

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் கூடுதல் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்பகுதி சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான முறையில் பேரணியாக சென்றனர். அப்போது  ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர், வேடிக்கை பார்த்து நின்ற மக்கள் மீது போலீசார் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நீண்ட கால  கோரிக்கைகளை ஏற்று கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 இலட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.5 இலட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில், அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.50 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.25 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.10 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.