மக்களுக்கு அடி மேல் அடி..! சிலிண்டர் காலி.. பெட்ரோல் தட்டுப்பாடு... இப்போ எண்ணெய் விலை உயர்வு..!

 
1

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால், பெரும்பாலான ஓட்டல்கள் விறகு அடுப்பிற்கு மாற்றியுள்ளனர். இதுஒரு புறம் இருக்க, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.  

தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலை உயர உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்பட போவதாவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில், சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  மேற்கு ஆசியாவில் போர் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

 கடந்த மாதம் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.155 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.110 ஆக இருந்தது. தற்போது ரூ.122 ஆக உயர்ந்துள்ளது.  கடலை எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பிற சமையல் எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது. 

இந்தியா சமையல் எண்ணெய்களில் சூரியகாந்தி, பாமாயில் உள்ளிட்டவற்றை மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 6 லட்சம் டன் பாமாயில், 3 லட்சம் டன் சோயாபீன் எண்ணெய், 1 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

முன்னதாக, சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 26.5 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அதை 16.5 சதவீதமாக குறைத்தது. இதனால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் குறைந்தது.  இந்த நிலையில், தற்போது  போர் பதற்றம் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், இல்லதரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.