மக்களே உஷார்..!! இனி கடனுக்கு போன் வாங்கி இஎம்ஐயை செலுத்த தவறினால்.. போன் முடக்கம் செய்யப்படும்..!

 
1

நீங்கள் இஎம்ஐ மூலம் போன் வாங்கி அதற்கு லோன் கட்டாமல் இருந்தால் அதை லாக் செய்யும் வழிமுறைகளை வங்கிகள் செய்யும். பல மாதங்களாகக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வந்த இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை தற்போது அமலுக்கு வர உள்ளது.கடன் தவணை செலுத்தாத ஒருவரிடமிருந்து சாதனத்தை நேரடியாகப் பெறுவது வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சாத்தியமில்லை என்பதால், மென்பொருள் மூலம் அவர்களைத் தண்டிப்பது ஒரு எளிதான வழியாகும்.

தனிநபர் கடன், கார் கடன் அல்லது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் ஒருவரின் தொலைபேசியை வங்கியால் முடக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் முன்மொழிவின்படி, ஒரு வாடிக்கையாளர் பொருள் வாங்குவதற்காக கடன் பெற்று 60 நாட்களுக்கு மேலாக EMI செலுத்தவில்லை என்றால், வங்கி நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு முன்பு வாடிக்கையாளருக்கு அறிவிப்பு வழங்குவது அவசியமாகும்.

நோட்டீஸ் அனுப்பிய பின்னர் 21 நாட்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் 21 நாட்களுக்குப் பின்னரும் கடன் திரும்ப செலுத்தப்படவில்லை எனும் பட்சத்தில் வங்கிகள் மொபைல் போனின் சில அம்சங்களை அந்த நபர் பயன்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.

வங்கிகளால் வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை முழுமையாக முடக்க முடியாது என்று கூறி, ரிசர்வ் வங்கி அவர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.

கடன் தொகையை மீட்டெடுப்பதற்காக வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ மொபைல் போனை முழுமையாக லாக் செய்வதோ அல்லது முடக்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டும் கட்டுப்படுத்த லெண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணைய வசதி , Incoming Calls அவசரக்கால SOS வசதி மற்றும் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு அறிவிப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை எக்காரணம் கொண்டும் முடக்க கூடாது என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

ஒருவேளை வாடிக்கையாளர் நிலுவை தொகையை செலுத்திவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மொபைலின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 250 வீதம் வட்டி இழப்பீடு வழங்க வேண்டும். 

மேலும், கடன் வசூலிப்பின் போது வாடிக்கையாளர்களை திட்டுவதோ, சமூக ஊடகங்களில் அவர்களது விவரங்களை பகிர்வதோ அல்லது மிரட்டுவதோ போன்ற கடுமையான அத்துமீறல்களில் கடன் மீட்பு முகவர்கள் ஈடுபடக் கூடாது என்றும், அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.