உயிருடன் இருப்பதற்கு சான்று கேட்ட வங்கி! செய்வதறியாது விழிக்கும் முதியவர்

 
grandpa

உயிருடன் இருப்பதற்கு வங்கி சான்று கேட்டதால், உயிருடன் இருப்பதற்கான ஆவணங்களைத் 72 வயது முதியவர் தேடி அலையும் சம்பவம் அரியலூரில் நிகழ்ந்துள்ளது.

bank

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72 வயது). வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் 1000 ரூபாய் பணத்தை வைத்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த மாதம் பணம் எடுக்க சேவை மையத்தை நாடி உள்ளார். வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில், கைரேகை பதிவு ஆகாததால் எடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த கட்டமாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் நேரடியாக சென்று  எழுதி கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரியிடம் கேட்டபோது தாங்கள் உயிருடன் இருப்பதற்காக சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். அதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி சந்தித்தபோது அவர், உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளார். ஆனால் அதனை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் கோவிந்தன் தாசில்தார் அலுவலகத்தை நாடியுள்ளார்.