நாளை முதல் ஆரம்பம்..! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.!
தாயுமானவர் திட்டத்தின் கீழ் இம்மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று கரூர், திருச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான முழுவிவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 14146 குடும்ப அட்டைதார்களுக்கும், நகரப் பகுதிகளில் 3905 குடும்ப அட்டைதார்களுக்கும், மலைப் பகுதிகளில் 492 குடும்ப அட்டைதார்களுக்கும் என மொத்தம் 18543 குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 23106 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அக்டோபர் மாதம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 06.10.2025 திங்கட்கிழமை ஆகிய நாட்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தினங்களில் தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிலே இருந்து பொருட்களை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70,186 குடும்ப அட்டைகளில் உள்ள 94,689 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள், 05.10.2025 மற்றும் 06.10.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில், 730 ரேஷன் கடைகளை சேர்ந்த 28694 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்களில் குடிமைப்பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மற்ற மாவட்டங்கள் விவரம்
இதேபோல், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
வாங்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை இந்த தேதியில் வாங்க முடியாதவர்கள் ரேஷன்கடை வேலை நாட்களில் நேரடியாக சென்று அல்லது பிரதிநிதியை அனுப்பிக்கூட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

