10 நாட்களுக்குப் பிறகு தலைமை செயலகம் திரும்பும் முதல்வர் ஸ்டாலின்..!

 
MK stalin letter MK stalin letter

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  உடல்நிலை சரியானதை தொடர்ந்து 10 நாட்களுக்குப் பிறகு இன்று தலைமை செயலகத்திற்கு வருகிறார்.  

நடைபயிற்சி சென்றபோது தீடீரென ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 21ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 6 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. அத்துடன் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் கவனித்து வந்தார்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன்  காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவது,  தலைமை செயல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு நிர்வாக பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.  பின்னர் உடல்நலன் சீராகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.  

இந்நிலையில் உடல்நலன் சரியாகி,  10 நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வர இருக்கிறார்.  அத்துடன் 5 திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.  முதலாவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயின்று, 2025 -26ம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக தேர்வாகியுள்ள 135 மாணவ , மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.  

govt

அத்துடன்  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை,  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை, போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகிய துறைகள் சார்பில் கட்டப்படுள்ள கட்டிடங்களை திறந்து வைப்பதோடு,  229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.  

மேலும், தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 39 பேருக்கும், கருணை அடிப்படையில் கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். அதேபோல் சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை சார்பில் வடிவகைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை - 2025’ஐ வெளியிடுகிறார்.  

அத்துடன் 2 மாநில வரி அலுவலகக் கட்டங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.