ஸ்டாலின் ஷாக்..! இனி திமுக உடன் கூட்டணி இல்லை - காதர் மொகிதீன்
சென்னை ராயபுரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நடைபெற்ற பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமான தீர்மானமாக, 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் திமுக உடனான கூட்டணி இனி தொடராது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இனி தமிழக வெற்றிக் கழக கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.
தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது, அதன் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்கிற நோக்கில் தவெக இணைந்தோம். தொடர்ந்து, அகில இந்திய தலைமையுடன் ஆலோசனை நடத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் அமைச்சரவையில் இடம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசு நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
இந்த ஆட்சி தொடர்வதற்கு எல்லா வகையிலும் நாங்கள் துணை நிற்போம். தவெக கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயர் சூட்டப்படாத அந்த கூட்டணியில்தான் தற்போது நாங்கள் உள்ளோம். இப்போது தவெக கூட்டணியில் இருக்கிறோம். இன்றும் இருப்போம், நாளையும் இருப்போம்.
இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில், ஜனநாயகத்தில் வாக்களிப்பதும் ஒரு கடமை என்று நான் கூறினேன். ஆனால், திமுகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தேவையான நேரத்தில் முதலமைச்சர் பதிலளிப்பார். நாங்கள் சோபா வாங்கவில்லை. முதலமைச்சர் வருகிறார் என்பதால் வாடகைக்கு சோபா எடுத்தோம். மறுநாளே அதை திருப்பிக் கொடுத்துவிட்டோம். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" என அவர் தெரிவித்தார்.

