இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 
ச்வ் ச்வ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா, செல்லுார் கிராமத்தில், 1924 ம் ஆண்டு அக்டோபர் 9ல் பிறந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். இராணுவத்திலும் பணியாற்றிய இமானுவேல் சேகரன், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். அவரது சமூக பங்களிப்பை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் நுாற்றாண்டையொட்டி, அவர் நினைவிடம் அருகே ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பில், அவரது உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம், அரசு சார்பில் கட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 அன்று அறிவித்தார்.

இதனை அடுத்து பரமக்குடி சந்தைத்திடல் அருகில் 50 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. மணிமண்டபம் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இமானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.தொடர்ந்து மணிமண்டபத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பரமக்குடி வந்த முதலமைச்சருக்கு தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.