10 ரூபாய் கடலையை ஓசியில் கேட்டு மிரட்டி வாங்கி சாப்பிட்ட எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

 
கடலை

திருச்சியில் கடலை வியாபாரியிடம் பணம் கொடுக்காமல் கடலையை  மிரட்டி வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ராஜன் என்பவருக்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் பொரி, கடலை,  நவதானியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.  அந்த கடைக்கு சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராதா என்பவர் கடலை கேட்டுள்ளார். அப்பொழுது அந்த கடையில் இருந்த ராஜனின் மகன் சாம் என்பவர், உதவி ஆய்வாளரிடம் கடலையை கொடுத்துவிட்டு பணம் கேட்டுள்ளார். அதற்கு ராதா, தான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் எனவும் தன்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டல் தொனியில் அவரிடம் பேசியுள்ளார். அவரை மிரட்டி கடலையையும் பணம் கொடுக்காமல் வாங்கிச் சென்றுள்ளார். 

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் மறைமுகமாக செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராதா மிரட்டி கடலையை வாங்கி சென்றது தெரியவந்து. அதனை அடுத்து அவரை பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.