எஸ்.ஆர்.எம். ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

 
ட் ட்

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு உள்ள ஹோட்டல் அமைந்துள்ள அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை 1994 ஆம் ஆண்டு 30 ஆண்டுகால குத்தகைக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகால குத்தகை தொகையாக ரூ.47,93,85,941 நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகளில் அந்த நிறுவனம் ரூ.9,08,20,104 மட்டுமே செலுத்தியது மீதமுள்ள ரூ.38,85,65,837 தொகையை செலுத்தாமல் ஹோட்டலை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில்  13.06.2022 - அன்று 30 ஆண்டுகால குத்தகை காலம் முடிவடைந்தது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த வந்த பொழுது எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினரும் ஐ.ஜே.கே கட்சியினரும் அன்றைய தினம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு காலக்கெடு விதித்தது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அதிகாரி வெங்கடேசன், திருச்சி மண்டல மேலாளர்  பிரபு தாஸ் தலைமையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் கையகப்படுத்தினர். ஹோட்டலுக்கு மேலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சுற்றுலா துறையை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஹோட்டலில் தங்கி உள்ள விருந்தினர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஹோட்டல் இயங்கி வருகிறது அலுவல் ரீதியாக முழுமையாக ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர் மேலும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதபடி தொடர்ச்சியாக அவர்களை பணியில் ஈடுபட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடைய எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை உத்தரவு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த உத்தரவு எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு ஆதரவாக வரும்பட்சத்தில் மீண்டும் ஹோட்டல் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்தியுள்ளதால் அங்கு  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்