சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதியின் தாய் போலீசில் புகார்

 
ஸ்ரீமதி

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதியின் தாய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த  2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளியில்  மர்மமான முறையில் உயிரிழந்தார் . சின்ன சேலம் கன்னியாகுமரியில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார்,  செயலாளர் சாந்தி,  முதல்வர் சிவசங்கரன்,  ஆசிரியர்கள் ஹரிப்பிரியா , கீர்த்திகா ஆகிய போலீசார் கைது செய்தனர்.  ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் சுமார் 1200 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா , ஹரிப்பிரியா ஆகியோரை குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கிலிருந்து நீக்கம் செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர், பள்ளி நிர்வாகத்திடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவதூறு பரப்பியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீமதியின் தாயார் செல்வி புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், “சவுக்கு சங்கர் தமது மகள் ஸ்ரீமதி குறித்தும் தன்னை பற்றியும் அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இது குறித்து அப்போதே சவுக்கு சங்கர் மீது காவல்துறையில் புகார் அளித்தேன். சவுக்கு சங்கரின் தனி உதவியாளரும் அவரது ஊடக பணிகளை கவனித்து வருபவருமான பிரதீப் பேட்டி ஒன்றில், ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகத்திடம் சவுக்கு சங்கர் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு மகள் ஶ்ரீமதி பற்றியும் தன்னைப் பற்றியும் இழிவுப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசிவருவதாக கூறினார். அந்த பேட்டியின் மூலம் ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி சிவசங்கரன் ஆகியோரிடம் சவுக்கு சங்கர் கையூட்டு பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. தங்களை இழிவுப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r