வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

 
vedharanyam

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டு துறையில் இருந்து நேற்று மதியம் இரண்டு பைபர் படகுகளில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். 

vedharanyam

இதனையடுத்து உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.