ஸ்ரீதர் வேம்பு சவால்: "திமுகவினருக்கு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுங்கள்!"

 
Q

ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளி விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்து தவெக அரசுக்கு உதவுவதற்காக நான் புனைந்த பொய் எனக்கூறி திமுக என்னை தாக்கி வருகிறது. இங்கு உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கலைவாணி கல்வி மையம் என்ற அமைப்பின் கீழ் தென்காசி மற்றும் தேனி ஆகிய கிராமப்புற பகுதிகளில் தலா ஒரு இலவச NIOS பள்ளி நடத்தி வருகிறோம்.

தேனியில் உள்ள பள்ளியை முதலில் நேர்மையான ஒரு ஐபிஎஸ் அதிகாரி தான் துவங்கி நடத்தி வந்தார். மிகச்சிறந்த வசதிகளை உருவாக்கி இருந்தார். ஆனால், தடையின்மைச் சான்றிதழ் வழங்க மாநில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்தினர். இதனால், சிபிஎஸ்இ பள்ளியை தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை. ஒரு நேர்மையான ஒய்வு பெற்ற அதிகாரியான தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்றும், பணம் கொடுக்காவிட்டால் சான்றிதழ் வழங்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.அவரது அறக்கட்டளையை ஏற்றுக் கொண்டு, அந்த வளாகத்தில் எங்களின் இலவச பள்ளியை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தேனியில் பள்ளியை துவங்கினோம்.

நான் வசிக்கும் தென்காசி போல் அல்லாமல் தேனியில் உள்ள பள்ளிக்கு மாநில அரசின் அங்கீகாரம் இல்லாத காரணத்தினால், திமுக ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டன. எனவே மாநில பாடத்திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற முயன்றோம். அதற்கும் கணிசமான பணம் தேவைப்பட்டது. இதனால் அந்த முயற்சியில் தேக்க நிலை ஏற்பட்டது.இதனிடையே தென்காசியில் உள்ள பள்ளியில் புதிய வசதிகளை ஏற்படுத்த விரும்பினோம். இதற்காக புதிய கட்டடங்களை கட்டுவதற்காக DTCP அமைப்பிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தோம். தமிழகத்தில் DTCP பற்றி அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் அங்கு எந்த மாதிரியான ஊழல் நடக்கிறது என்பது தெரியும்.

புதிய கட்டடம் கட்டுவதற்கான DTCP அனுமதிக்காக பொறுமையுடன் காத்திருந்தோம். ஆனால் ஆட்சியில் திமுக இருந்தவரை அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சி மாறியதும் அனுமதி தானாக கிடைத்தது.DTCP ஒப்புதலை பற்றித்தான் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இந்த மாற்றத்தை நான் மீண்டும் ஒரு முறை பாராட்ட விரும்பினேன்.

ஒப்புதல் கிடைத்தது மட்டும் அல்லாமல், எந்த ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அரசு எங்களிடம் கூறியது. இதற்கு முன்பு நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பிறகு, இதை நான் பொது வெளியில் பாராட்ட வேண்டும். இதற்குத்தான் திமுக என்னை விமர்சித்து வருகிறது. எனது குணநலன்களுக்கு அவர்களின் சான்றிதழ் தேவையில்லை.

தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் என்னைப் போன்றவர்கள் ஏன் இவற்றைப் பதிவிட வேண்டும் என்று அவர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து கேட்கலாம். நான் ஒரு பிராமணன், தவெகவின் கைக்கூலி, சங்கி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அவர்களுடைய இழிவான தனிப்பட்ட தாக்குதலுக்கு நான் பணிந்து விடுவேன் என அவர்கள் நினைத்தால்,நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது;உங்களைப் போன்ற பணக்கார வம்சாவளியை போல அல்லாமல், நான் ஏதுமில்லாமல் வளர்ந்தேன். நான் தமிழ் வழிப் பள்ளியில் படித்தேன். ஏதுமில்லாமல் எப்படி வாழ்வது என்பது எனக்குத் தெரியும். நமது சனாதான நாகரிகத்தின் ஆன்மாவான கிராமபுறங்களுக்கு புத்துயிர் அளித்து, பாரதத்தை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைய செய்வதற்காக எனது வாழ்நாளை நான் அர்ப்பணித்துள்ளேன்.

திமுகவினரின் தாக்குதல்களை கண்டு அஞ்சமாட்டேன். மரணத்திற்கே அஞ்சாதவன். அப்படி இருக்கையில் திமுகவை கண்டு ஏன் பயப்பட வேண்டும்? அவர்களுக்கு சிறிதளவு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். (அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்). அதன் பிறகு அவர்கள் எனது நடத்தையை தாக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.