தமிழக முதல்வர் தொடங்கி வைத்த திட்டத்தை பின்பற்றி இலங்கையில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம்..!

 
1

ஆரோக்கியமான சுறு சுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்படும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை படிக்கும் 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைவர். இந்தத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார். 

அவர் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினார். மாணவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாடு களை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.