நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..
நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் அல்லது கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை. இந்நிலையில் இன்று வேதாரண்யம் மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து பாக்யராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு 10 நாட்டிகல் மயில் தொலைவில் வலைகளை விரித்துவிட்டு, அவர்கள் படகில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர் வேதாரண்யம் மீனவர்களின் படகில் ஏறி, கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர். அத்துடன் ஜிபிஎஸ் கருவிகள் , வலைகள், மீன்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு கடற்கொள்ளையர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர் அன்பழகன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற நான்கு மீனவர்களும் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.