சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு: இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொடூரக் கொலை!

 
Q

இலங்கையை சேர்ந்த நகுலேஸ்வரன், தன் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் அனிச்சன்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். இவரது மகள் யான்சி, 18; சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மோகத்தில், 'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதள பக்கத்தில், 'வீடியோ'க்கள் வெளியிட்டு வந்தார்.

இவர், கடலுாரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த போது, தம்பிதா என்ற தோழி வாயிலாக, சென்னை ராமாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கிய தோழியராக மாறினர்.

கடந்த 19ம் தேதி, ராமாபுரத்தில் உள்ள தோழி வீட்டிற்கு வந்து யான்சி தங்கியுள்ளார். இருவரும், 28ம் தேதி இரவு சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் காலையில் தான் வீடு திரும்பி உள்ளனர். அதனால் இருவரையும், 17 வயது பெண்ணின் தாய் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் வெளியே சென்று வருவதாக, 29ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள, 'எம்.எம்.எஸ்., சென்னை கேட்வே' என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளனர். அங்குள்ள மதுக்கூடத்தில் அவர்கள் மது குடித்ததாகவும் கூறப்படுகிறது.

பின், அவர்கள் நடனமாடிய போது, மற்றொரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர், யான்சியின் இடுப்பை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுக்கூடத்தில் இருந்த பவுன்சர்கள், நள்ளிரவில் சமரச பேச்சு நடத்தி, இரு தரப்பினரையும் வெளியேற்றி உள்ளனர். தாக்கி கொண்டனர் மதுக்கூடத்தை விட்டு வெளியே வந்த யான்சி தரப்பினர், கோயம்பேடு பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள கடை ஒன்றில் காத்திருந்தனர். எதிர் தரப்பினரும் அதே இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

யான்சியையும், அவரது தோழியையும், எதிர்தரப்பினர் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். அங்கிருந்தோர், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி, வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மோதலை கைவிட்ட போதிலும், இரு தரப்பினரும் சில மணி நேரம் அங்கேயே காத்திருந்தனர். பின், யான்சியும், அவரது தோழியும் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் சென்றனர். வாகனத்தை யான்சி ஓட்டினார். அவரை பின் தொடர்ந்து, யான்சியின் ஆண் நண்பர்களும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

இவர்களை பின் தொடர்ந்து, எதிர் தரப்பினரும் காரில் சென்றனர். அப்போது, யான்சியின் ஆண் நண்பர்கள், கார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.

இதில், காரில் சென்றவர்கள் ஆத்திரமடைந்து, பிரச்னைக்கு காரணமாக இருந்ததாக யான்சி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது, மின்னல் வேகத்தில் சென்று மோதினர். கொலை வழக்கு இதனால், யான்சி துாக்கி வீசப்பட்டதுடன், அவர் மீது காரை ஏற்றியதால், சம்பவ இடத்திலேயே பலியானார்; அவரது, 17 வயது தோழி படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.

அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.

இச்சம்பவம் குறித்து, கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் கிஷோர்குமார், 19, 'மாருதி' கார் ஷோரூம் ஊழியர் அரும்பாக்கத்தை சேர்ந்த பாலகுரு, 21, சூளைமேடு ஜோஷ்வா, 19, ஆகியோரை நேற்று கைது செய்தனர்; காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், புதுச்சேரியில் பதுங்கியிருந்த விமல், மோகனசுந்தரம், ராகுல் உள்ளிட்ட நான்கு பேரை, அம்மாநில போலீசார் உதவியுடன் பிடித்து விசாரித்து வருகின்றனர்.