ஆன்மீகம் அறிவோம் : ராகு - கேதுவை கையில் ஏந்திய படி இருக்கும் சிவ பெருமான்..! எங்கு தெரியுமா ?
ஜோதிட சாஸ்திரப்படி, ராகும் கேதுவும் பாவ கிரகங்கள் என்றும், இரட்டை கிரகங்கள் என்றும் சொல்லப்படுபவை. பூர்வ புண்ணிய கர்ம விவைகளின் அடிப்படையில் பலாபலன்களை கொடுக்கும் கிரகங்களாக இவை உள்ளன. சர்ப்ப கிரகங்களான இவைகளே திருமணத்தடை, புத்திர பாக்கிய தடை ஏற்பட காரணமாக உள்ளன. குறிப்பாக இளம் வயதில் இருப்பவர்களின் வாழ்க்கையில் பல விதமான தோஷங்கள், குறிப்பாக கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் ஏற்பட காரணமாக இருப்பதும் இடைகள் தான்.
நவகிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்தபடியாக அனைவரையும் மிரள வைக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும் தான். மனிதன் பாதி, பாம்பு பாதி என உடல் அமைப்பை கொண்ட இந்த கிரகங்கள், அசுரர்கள் ஆவர். பாற்கடலை கடைந்த போது தேர்வர்களை போல் வேடமிட்டு, மகாவிஷ்ணு அளித்த அமிர்தத்தை பருகினர். இதனால் தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு இவர்களை இரண்டு துண்டுகளாக வெட்டினார் திருமால். இருந்தும் அமிர்தத்தை உண்டதால் மரணம் இல்லாத வாழ்வை பெற்றன. பிறகு சிவனை நோக்கி தவம் இருந்து, நவகிரகங்களில் ஒருவராக இடம்பிடித்தனர்.
பொதுவாக ராகுவும், கேதுவும் நவகிரகங்கள் ஒரு கிரகமாக தான் இடம்பிடித்திருப்பார்கள். இவர்களுக்கு என தனி சன்னதி, திருநாகேஸ்வரம் போன்ற குறிப்பிட்ட பரிகார தலங்களில் மட்டுமே உள்ளன. அங்கும் உடலில் ஒரு பாதி மனிதனாகவும், ஒரு பாதி பாம்பாகவும் உள்ள உருவத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் இருவருமே மனித முகத்துடன் காட்சி தரும் கோவில் ஒன்று தமிழகத்தில் உள்ளது.
அதிலும் சிவ பெருமானே தனது ஒரு கையில் ராகுவையும், மற்றொரு திருக்கரத்தில் கேதுவையும் தாங்கி இருப்பது போலவும், இவர்களுக்கு அருகில் பார்வதி தேவி அமர்ந்து இருப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். இது போன்ற காட்சியை வேறு எங்கும் தரிசிக்க முடியாது. ராகு - கேதுவை தனது திருக்கரங்களில் தாங்கிய படி காட்சி தரும் சிவ பெருமானை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் மஹாகாளீஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த இந்த கோவிலின் முக்கியமான தனிச்சிறப்பாகும்.
மஹாகாளீஸ்வரர், மாகாளேஸ்வரர் என பல பெயர்களில் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மாகாளன் என்ற பாம்பு காளஹஸ்தியில் இருந்து இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு, முக்தி பெற்றதால் இத்தல இறைவன் மாகாளேஸ்வரர் என அழைக்கப்படுவதாக தல புராணம் சொல்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் ராகு - கேது பூஜித்த தலமாக உள்ளது. இதனால் இது ராகு - கேதுவுக்கு உரிய முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.
இத்தலம் காமகோட்டத்திற்கும், காளி கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வந்து வழிபட்டால் திருமணத்தடை, புத்திர பாக்கியத் தடை ஆகியன விலகும். சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

