பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு.. தட்டிக்கேட்ட ஆசிரியரை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..
அரசுப் பள்ளியில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய நபரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். .
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து, பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார். அவர், “தனது இரு கண்களையும் இழந்த தமிழ் ஆசிரியர் சங்கருக்கு, கண்ணாக இருப்பது அவர் படித்த கல்விதான். யாராவது பிற்போக்கு கருத்துக்களை சொன்னால் எதிர்த்து கேள்வி கேட்பவர். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அதுவும் தமிழ் ஆசிரியர். தமிழ் என்றாவது நம்மை கைவிடுமா?” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.