தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்..!!

 
Q

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

தமிழகத்தில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்கலாம் என்றும், அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:- சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

எனவே, வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் சிறப்பு மிகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.