என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என குழப்பமா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

 
கவுன்சிலிங்

உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கென உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கடந்த 2023-2024 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் பொறியியல் படிப்புக்கும், பலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்துவருகின்றனர். இச்சூழலில் உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கென  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளவும் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையாக வழிகாட்டவும் ஆலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன. நுழைவுத் தேர்வு மூலம் நினைத்த கல்வி நிறுவனத்தில் சேர இயலவில்லை எனினும், கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி உரிய வழிகாட்டுவதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி மாணவர்களும் 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம்.

வழிகாட்டுதல் வேண்டி வரும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள்/ ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத் தேர்வு தொடர்பான வழிகாட்டுதலுக்கு 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கலாம். மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.