இன்றும் நாளையும் சிறப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..! – வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த அரிய வாய்ப்பு..!

 
voter id card

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத தகுதியுடைய இந்தியக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். 01.01.2027, 01.04.2027, 01.07.2027 மற்றும் 01.10.2027 ஆகிய தேதிகளில் 18 வயது நிறைவடைவோரும் முன்கூட்டியே படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் படிவம் 6A மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு அல்லது அதே தொகுதிக்குள் வசிப்பிடத்தை மாற்றியிருந்தால், பெயர் அல்லது பிற விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அல்லது மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டியிருந்தால் படிவம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாநிலத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் இரு நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதே போல வருகின்ற 29ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (https://voters.eci.gov.in/) வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் வயது மற்றும் வசிப்பிட முகவரிக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். வயது சான்றாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதி குறிப்பிடப்பட்ட 10 அல்லது 12ஆம் வகுப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

முகவரி சான்றாக ஆதார் அட்டை, இந்தியப் பாஸ்போர்ட், வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், மின்சாரம் அல்லது குடிநீர் அல்லது எரிவாயு இணைப்புக்கான ரசீது, நில உரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பனைப் பத்திரம் ஆகியவற்றில் பொருத்தமான ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.

டிசம்பர் 11 ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் 28 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.