திமுக குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதில்..!

 
1

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு உதவி பெறும் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு சென்னை திரும்பும் வழியில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவையின் மரபுகள் மற்றும் விதிகளை மதித்து, நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறேன்.

அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக புதிய உறுப்பினர்கள் மற்றும் குறைவாக பேசும் உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதை தனது முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறேன்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சரின் பதிலுரையின்போது, அவையின் அமைதியைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர். அவைக்குள் பதாகைகளை ஏந்துவது விதிகளுக்கு முரணானது என்றாலும், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்பட்டது. ஆனால் விவாதங்கள் மற்றும் முதலமைச்சர் பதில் உரையை முழுமையாகக் கேட்காமல் அவையைத் தடை செய்ய எதிர்க்கட்சிகள் முயன்றது கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது.

விவாதங்களில் திமுக உறுப்பினர்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்களுக்குமே அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையான அணுகுமுறையே பின்பற்றப்பட்டிருப்பது தெளிவாகும்.

நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் அளித்துள்ள கோரிக்கை மனு தற்போது பரிசீலனையில் இருக்கிறது. முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்கான தேதிகள் முறைப்படி குறிக்கப்பட்டு நேரடி விசாரணை நடைபெறும்" என்றார்.

'துண்டுச் சீட்டு' விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அவர், "சபையை நடத்துவதற்கு தனக்கு வழிகாட்டுதலாக எந்தவிதமான துண்டுச் சீட்டுகளும் வரவில்லை. அத்தகைய சீட்டுகளின் அடிப்படையில் தான் செயல்படுவதில்லை. சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பாக சபையில் நடைபெற்ற முந்தைய விவாதங்களின் துல்லியமான தேதிகள் மற்றும் ஆண்டுகளை சரிபார்ப்பதற்காக மட்டுமே பேரவை செயலகத்திடமிருந்து குறிப்புகள் பெறப்பட்டது" எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் பதிலுரையின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் திமுகவுக்கு பேச வாய்ப்பு வழங்குமாறு சபாநாயகரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருக்கைக்கு திரும்பிய நிலையில், அதன்பிறகு பேசிய சபாநாயகர் வாய்ப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயரிடம் துண்டு சீட்டு வழங்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்தே தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.