தவெக எம்.எல்.ஏவின் கருத்து அவை குறிப்பிலிருந்து நீக்கம் - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்..!

 
1

தவெக எம்.எல்.ஏ கருப்பையா ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து, அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வீட்டு வசதி துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா உரையாற்றினார். அப்போது, ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை என்றும், அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது. மேலும், தவெக எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து, அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

“சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து பேரவையில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். மேலும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பிலும் இது குறித்து கடிதம் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பேரவையில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருப்பையா பேசிய குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் நான் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்னிடம் விளக்கம் அளித்துள்ளார்” என சபாநாயகர் தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க முயன்றபோது, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என கூறி, அவருக்கு அனுமதி வழங்காமல் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.