ஈரோட்டில் கூட்டம் தொடங்கும் முன்பே அதிமுகவினரை எச்சரிக்கை விடுத்த எஸ்.பி. வேலுமணி

 
velumani

நெல்லை, கன்னியாகுமரி, கும்பகோணம், மதுரை என அதிமுகவின் கூட்டங்களில் தொடர் மோதல் சம்பவங்களை தொடர்ந்து, ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில்,  நிர்வாகிகள் பேசுவதற்கு கட்டுப்பாடு விதித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, முன் எச்சரிக்கையாக, கூட்டத்தில் இருந்து செய்தியாளர்களையும் வெளியேற்றினார்.

sp velumani


அதிமுக.வின் கள ஆய்வு கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், S.P.வேலுமணி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்ற கள ஆய்வு ஆலோசனை கூட்டம் ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  
ஏற்கனவே, இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நெல்லை, கும்பகோணம், கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. 

இத்தகைய சம்பவங்களை தவிர்க்க, கூட்டம் தொடங்கியதும் அறிவுறத்தலை வழங்கிய எஸ்.பி.வேலுமணி, கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்குவது குறித்து மட்டுமே நிர்வாகிகள் பேச வேண்டும், வேறு எதைப்பற்றியும் யாரும் பேசக்கூடாது என உத்தரவிட்டார். மேலும், அவ்வாறு யாரும் பேசினால் ஏற்படும் பிரச்சனை குறித்த செய்தி வெளியாகாமல் தடுக்க, கூட்டத்திற்குள் இருந்த செய்தியாளர்களையும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். முன்னதாக கூட்டத்திற்கு வந்த எஸ்.பி வேலுமணியின் காருக்கு முன்பாக சைரன் ஒலித்த படி சாலையில் கான்வாய் சென்றது.