கோவையில் குடிநீர் பிரச்சனை! 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது- எஸ்பி வேலுமணி

 
velumani

கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

velumani


கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரிடம் இன்று மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் ,அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி ஆகியோர்  மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  “கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது என்றார். குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம். அதிமுக ஆட்சியில் குளங்கள் , அணைகள் தூர் வாரப்பட்டு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது என கூறினார். சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும், அத்திகடவு, அவினாசி திட்டத்தையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. 

பொள்ளாச்சியில்  தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுவதாகவும் ஆனால் அதையும் அதிகாரிகள்  தடுக்கின்றனர் எனவும் கூறிய அவர், இதை தடுக்க கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை எனக்கூறிய அவர், கோவை மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை என்றும் குடிநீர் பிரச்சினை விரைவில்  சரி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை நிலவுவதாக புகார் கூறிய எஸ்பி வேலுமணி, 10 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருவதாகவும், அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.