‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என பெயர் மாற்றுக’ - அரசுக்கு கோரிக்கை வைத்த மகன்..!

 
SPB Charan

 மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசி வரை வாழ்ந்த காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.  

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்.  பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார். 40 ஆயிரம் பாடல்கள், ஆறு தேசிய விருதுகள், ஒரே நாளில் 21 பாடல்கள் என எவரும் செய்திட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டியவர். 

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்ற எஸ்.பி.பி., அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களின் மனதை ஆக்கிரமித்திருந்தார். பல தலைமுறை கலைஞர்களுடன் பணியாற்றிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மறைந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி நீண்ட காலம் வசித்த காம்தார் நகர் பகுதியை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். 

SPB

அவர் அளித்த மனுவில், “நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து மாறா அன்பை பெற்ற மறைந்த  எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில்,  அவர் இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னை 600034, காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு அவருடைய ரசிகன் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.  அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமை பட்டிருக்கிறேன் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.