“100 அடி பள்ளத்தில் இருப்பவர்களுக்கு 50 அடி கயிறு போதுமா?” - பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து சௌமியா அன்புமணி பேச்சு
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது உரையை தொடங்குவதற்கு முன்பு பாமக சார்பில் முதல்வர் விஜய்க்கு சௌமியா அன்புமணி MLA பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய செளமியா அன்புமணி, “விவசாயம் செய்ய வாங்கிய கடனை செலுத்த முடியாத அவமானத்தால் தமிழ்நாட்டில் தினந்தோறும் 2 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை விட்டுள்ளனர். பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதை செலவாக பாா்க்காதீா்கள். மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் வேலை செய்பவர்கள் வேளாண் மக்கள்தான். எனவே, விவசாயிகள் வாங்கிய பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 100 அடி ஆழமான பள்ளத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு அரசு 50 அடி கயிறுதான் கொடுத்திருக்கிறது. 100 அடி பள்ளத்தில் இருப்பவர்கள் 50 அடி கயிறை வைத்து எப்படி வெளியே வர முடியும்?
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததே ஆட்சி மாற்றத்திற்கு காரணம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடரக்கூடாது. பெண்கள் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது. இனி பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள். துபாய் போல பெண்கள் மீது கைவைத்தோருக்கு மரண பயத்தை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மீது கைவைப்போருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

