தந்தை கண்முன்னே இரண்டு மகன்களும் தலை நசுங்கி பலி

 
accident

மதுரவாயலில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தபோது லாரி ஏறி இறங்கியதில் தந்தை கண் முன்னே இரண்டு மகன்கள் தலை நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை சேர்ந்தவர் செல்வம்(36), இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமலதா(29), இவர்களுக்கு ஆதிரன்(4), கவுசிக்(2), மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. இவர்களது உறவினர்கள் இன்று சபரிமலைக்கு இருமுடி அணிந்து சபரி மலைக்கு செல்வதால் மகாலிங்கபுரத்தில் உள்ள கோவிலுக்கு தனது இரண்டு மகன்களையும் செல்வம் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். 

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மோதியதில் சாலையில் மூன்று பேரும் சாய்ந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியதில் ஆதிரன், கவுசிக் ஆகிய இருவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் வலியாலும் தன் கண் முன்னே இரண்டு மகன்கள் இறந்த போனதை கண்டு கதறி அழுதார். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து போன சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த கேமராக்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் விபத்து குறித்த காட்சிகளும் கேமராவில் பதிவாகவில்லை.