சொத்தை விற்று பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்

உதகையில் தனது கடனை அடைக்க சொத்தை விற்று பணத்தை தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மிஷ்னரிஷில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (72). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் சந்தோஷ் (42) சென்னையில் தனியார் வாகன ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சந்தோஷிற்கு கடன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது கடனை அடைப்பதற்காக தந்தை மாணிக்கத்திடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு பல முறை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி சந்தோஷ் சொத்து பிரிப்பது தொடர்பாக பேச சென்னையில் இருந்து உதகைக்கு வந்துள்ளார். பின்னர் மது போதையில் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், சொத்தை பிரிப்பது தொடர்பாக தந்தை மாணிக்கத்திடம் பேசும் போது கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், மாணிக்கத்தின் கழுத்து பகுதியை சந்தோஷ் கடுமையாக தாக்கியதில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து சுய நினைவையிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர மத்திய காவல் துறையினர்ம் மாணிக்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணிக்கத்தை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்த உதகை B1 போலீசார் சந்தோஷை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் உதகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.