தந்தை பைக் வாங்கித் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

தந்தை பைக் வாங்கித் தரவில்லை என மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு தெற்கு தெரு பகுதியைச் சார்ந்த நடேசன் என்பவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான மாதேஷ் என்பவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருவதாகவும், அவருடைய தந்தை நடேசனிடம் ஆர்ஒன் 5 என்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை கேட்டதாகவும் அதற்கு அவரது தந்தை நடேசன் வாங்கி தர முடியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அதனால் விரக்தி அடைந்த மாதேஷ் தனது தாய், தந்தையினர் காட்டிற்கு வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்திக் கொண்டு தனது தாயின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனம் வாங்கித் தர முடியாது என்று சொன்னதால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மாதேஷின் பிரேதத்தை உடல் கூராய்விற்காக எடுத்துச் செல்ல காவல்துறையினர் முற்பட்டபோது, என் மகன் சடலத்தை யாரும் எடுக்க வேண்டாம் என்று இறந்த மாதேஷின் தாயும், அவரது உறவினர்களும் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு தொடர்ந்து நான்கு மணி நேரமாக இந்த வாக்குவாதமானது நீடித்த நிலையில், பின்பு சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மாதேஷ் உறவினரிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை கேட்ட மகனுக்கு வாங்கித் தர முடியாது என்று கூறிய தந்தையால் விருத்தி அடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சடலத்தை எடுக்க விடாமல் காவல்துறையினரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து மாதேஷின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாதேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.