அரசுக்கு பாராட்டுகள் வருவதை சிலரால் தாங்கிக்கொள்ல முடியல - முதல்வர் ஸ்டாலின்..
"எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் வடகிழக்கு பருவமடையை எதிர்கொள்ள செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் ரெட்டேரி ஏரி தூர்வாரம் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து கொளத்தூரில் உள்ள வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர் , தணிகாசலம் உள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ள தடுப்பு பணிகள் மக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக நடந்துள்ளது. மழை வெள்ளத்தை அரசியலாக்கி வியாபார பொருளாக சிலர் முயற்சிக்கின்றனர். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன. பாராட்டுகள் அரசுக்கு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சிலரின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் வருகிறது. அதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை. அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்துவிட்டது. வருங்காலத்தில் எந்த மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.