பிடித்து வந்த பாம்பே எமனாக மாறிய சோகம்!10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு!

 
1

மத்தியப் பிரதேச மாநிலம் பியாவ்ரா (Biaora) நகரில், விஷமிக்க கட்டுவிரியன் (Karait) பாம்பு கடித்ததில் 40 வயதான பாம்பு பிடி வீரர் பிரவேஷ் என்ற பீனு பரிதாபமாக உயிரிழந்தார்.

திங்கள்கிழமை இரவு பியாவ்ரா நகரின் சுதாலியா ரோடு பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், பிரவேஷ் அங்கு சென்று அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தார்.

பிடித்த பாம்பை வீட்டிற்கு எடுத்து வந்த அவர், தனது குழந்தைகளிடம் அதைக் காண்பித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாம்பு அவரை தீண்டியது.

பாம்பு கடித்த ஆரம்பத்தில், அதனைப் பிரவேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்குக் கடும் நெஞ்சு படபடப்பும் அசௌகரியமும் ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைக்கப்பட்டார். எனினும், போபால் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

உயிரிழந்த பிரவேஷ் கடந்த 10 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த காலக்கட்டத்தில் பல பெரிய மற்றும் ஆபத்தான பாம்புகளைப் பிடித்து, வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுள்ளார். உயிரிழந்த பிரவேஷிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பியாவ்ரா நகரக் காவல் ஆய்வாளர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "பிரவேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.