டிப் டாப் உடையில் கஞ்சா கடத்தல்- 14.5 கிலோ கஞ்சா பறிமுதல்

 
ட்

கோவையில் இருந்து பேருந்து மூலம் 14.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உட்பட இருவரை கேரளா கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Image


கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை -  வாளையார் எல்லையில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்திருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் இருவரையும் பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். இதில் பிடிபட்ட நபர்கள் மலப்புரத்தை சேர்ந்த ஆல்பின் மற்றும் கோழிக்கோடு பண்ணியங்காரை பகுதியை சேர்ந்த ஷீபா என்பதும்,  ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஷீபா பெங்களூரு சென்று ஆல்பின் மற்றும் வேறு ஒரு இளைஞருடன் சேர்ந்து கஞ்சா கடத்தி வர திட்டமிட்டதும் தெரியவந்தது.  மேலும் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சாவை எடுத்து வந்த இருவரும் கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த கலால் அதிகாரிகள் 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.