புகை பிடிப்பவர்கள் ஷாக்..! சிகரெட் விலை மீண்டும் உயர்வு..!
ITC நிறுவனம் தனது கோல்டு ஃப்ளேக் பிரீமியம் சிகரெட் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. 10 சிகரெட்டுகள் கொண்ட பாக்கெட் விலை ரூ.125ல் இருந்து ரூ.135 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்த பிராண்டின் விலை 17.4% உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ரூ.115ல் இருந்து ரூ.125 ஆக விலை உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சிகரெட்டுகளுக்கு 40% ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் கலால் வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், விலை உயர்வு தொடர்கிறது.
ஐடிசி தயாரிக்கும் கிளாசிக் கனெக்ட் மற்றும் கோல்டு ஃப்ளேக் சூப்பர் ஸ்டார் பிராண்ட் சிகரெட் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டு, புதிய விலையில் டீலர்களுக்கு விற்பனை செய்யவும் துவங்கியுள்ளது. இதன் மூலம் ரீடைல் சந்தையிலும் புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது.
தற்போது சந்தையில் 20 சிகரெட் கொண்ட கிளாசிக் கனெக்ட் 428 ரூபாய்க்கு விற்க துவங்கப்பட்டு உள்ளது. முன்பு 390 ரூபாயாக இருந்த இது, 9.74 சதவீதம் விலை உயர்ந்து 428 ரூபாய் MRP விலையுடன் சந்தைக்கு வந்துள்ளது. இதேபோல் கோல்டு ஃபளேகிங் சூப்பர் ஸ்டார் 10 சிகரெட் கொண்ட பாக்கெட் விலை 79 ரூபாயில் இருந்து 12.66 சதவீதம் அதிகரித்து 89 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைத்த போது 4 வரி அடுக்குகளாக இருந்த வரி அமைப்பை 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. அப்போது புகையிலை போன்ற சின் கூட்ஸுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 40 சதவீத அடுக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதை தாண்டி பிப்ரவரி 1, 2026 முதல் சிகரெட் மீது அதன் நீளம் அடிப்படையில் கலால் வரி விதிக்கப்பட்டது.கலால் வரி விதிப்புக்கு பின்பு சிகரெட் விலைகள் தாறுமாறாக உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.

