ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கோஷம் - 16 பேர் அதிரடியாக கைது

 
ooty arrest

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய 16 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார். இதனிடையே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஊட்டி ராஜ்பவன் மாளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இந்த அறிவிப்பால் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊட்டி ராஜ்பவன் மாளிகையை யாரும் நெருங்க முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 250-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜ்பவன் மாளிகை பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணித்தபடி இருந்தனர்.
 
இந்நிலையில், கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் காலை 8 மணிக்கு ராஜ்பவன் அருகே உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜ்பவன் மாளிகை நோக்கிச் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சிலர் கைதாக மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி வேனில் ஏற்றினர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.