பவர் கட் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்... தவெக அரசுக்கு சிவசங்கர் அறிவுரை

 
சிவசங்கர்

முன்னாள் போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான, எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில்,தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து மின்வெட்டு புகார், சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே பிரச்சினை தொடர்கிறது. இது குறித்து அரசியல் ரீதியாக யாரும் விமர்சனம் செய்யவில்லை. சமூக வலைதள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கின்ற வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் இந்த துறையின் கடன், ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து பலவகையில் பேசுகிறார். ஆட்சி அமைந்து ஏறக்குறைய 20 நாட்கள் ஆகிவிட்டது. மின் பற்றாக்குறை இருக்கிறதா? என இதுவரை ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி, உரிய முடிவெடுத்து செயல்படுத்தி இருந்தாலே, இந்த பிரச்சனைகள் இருக்காது. ஆனால், இதே பணியாளர்கள் பற்றாக்குறை, இதே கடனோடுதான் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் மின் பற்றாக்குறை மற்றும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு சரியான முறையில், சீரான முறையில் மின்சாரம் வழங்கி வந்தது. ஆனால், ஏதோ புதிதாக இப்பொழுது அவர்கள், வேறு உலகத்திற்கு வந்தது போல பேசுகிறார்கள். இது ஒன்றிய அரசின் குரலாக உள்ளதா? என சந்தேகம் எழுகிறது.

ஒன்றிய அரசு தான் மொத்த தமிழ்நாட்டை மாத்திரமல்ல, இந்தியாவையே தனியார் மையமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே தனியார் வசம் மின்துறையை ஒப்படைத்தது போல, இந்தியாவின் ஏனைய மாநிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு சில அமைச்சர்களைக் கொண்ட கூட்டத்தை நடத்தி முயற்சித்து வந்தார்கள். மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இதுகுறித்து எதிர்க்குரல் எழுப்பியும், கடிதம் எழுதியும் தமிழ்நாட்டின் சார்பாக அதற்கு எதிராக பதிவுகளையும்-எதிர்ப்பையும் பதிவு செய்து வந்தார்கள். ஆனால், இன்று பொறுப்பேற்று இருப்பவர்கள், பொறுப்பேற்றுள்ள இத்தனை நாட்களுக்குள் அதற்கான தீர்வு என்ன? என்பதை பார்க்காமல், கடந்த ஆட்சியை குறை சொல்வது போலவும், புதிதாக ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது போலவும் பேசிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. மக்கள் உங்களிடம் பவரை கொடுத்துள்ளனர். பவர் கட் கூடாது என்றே மக்கள் கேட்கின்றனர். அதற்கு என்ன வழி என்பதை பார்த்தாலே போதும். தமிழ்நாடு மின் துறையில் பணிபுரியும் அலுவலர்கள், மிகச் சிறப்பான அலுவலர்கள். இந்தியாவிலேயே சிறந்த முறையில் பணி செய்யக்கூடியவர்கள் அவர்களுக்கு தெரியும். எந்த பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என தெரியும். அவர்களை அழைத்துப் பேசினால் மக்களுக்கு சிரமம் அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், இவர்கள் ஏதோ உள்நோக்கத்தோடு ஒன்றிய அரசின் குரலாக இருப்பது போல தோன்றுகிறது. எனவே மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த அரசு உடனடியாக முன்வர வேண்டும் மக்கள் கேட்பதெல்லாம் தடையற்ற மின்சாரம் அதை வழங்குவதற்கு முதலில் இவர்கள் பணியாற்ற வேண்டும் என முன்னாள் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வீடியோ வெளியிட்டு தவெக அரசுக்கும், மின்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் அறிவுரை கூறியுள்ளார்.