“யாரு என்ன வேணாலும் சொல்லட்டும்! இந்த பொங்கல் அண்ணன், தம்பி பொங்கல்தான்”- சிவகார்த்திகேயன்
யாரு என்ன வேணாலும் சொல்லட்டும். இந்த பொங்கல் அண்ணன், தம்பி பொங்கல்தான். ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ஜனநாயகனை கொண்டாடுங்க. 33 வருஷம் நம்மள என்டர்டெயின் பண்ணவர் விஜய் அண்ணா என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரி கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை காண்பதற்காக ஏராளமான ரசிகர்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர்.
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாக காட்டுகிறது. படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்.

நாங்கள் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்து இருந்தோம். கொஞ்ச நாட்கள் கழித்து விஜய் சாரோட படம் ஜனநாயகன் பொங்கலுக்கு வருவதாக அறிவித்தார்கள். உடனே தயாரிப்பாளர் ஆகாசுக்கு தொடர்பு கொண்டு சொன்னேன். இரண்டு படம் பொங்கலுக்கு வருகிறது என்று சொல்லும்பொழுது இரண்டுக்கும் இடையில் பத்து நாட்களில் இருக்கிறது. ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் நான் தேதி ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமா என்று கேட்டேன். அதில் இரண்டு சிக்கல்கள் உள்ளது நம்முடைய பிசினஸ் அனைத்தும் ஜனவரி என்று சொல்லி தான் செய்திருக்கிறோம். மற்றொன்று ஏப்ரல் மே யில் தான் வெளியிடுவது போல் வரும் அப்போது தேர்தல் வருகிறது. இது எனக்கு சரியாகவும் பட்டது. இதை சரியாக கம்யூனிகேட் பண்ண வேண்டும் என்று விஜய் சாருடன் இருக்கக்கூடிய ஜெகதீசிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு அவர் டிஜிட்டல் பிசினஸ் இருந்ததால் ஜனவரிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார். பராசக்தியும் ஜனவரிக்கு வருவதாக தான் திட்டமிட்டிருந்தோம் எனக் கூறினோம். இரண்டு படமுமே வரட்டும் எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறினார். இரண்டு படம் வருவது பிரச்சனை இல்லை விஜய் சாரோட கடைசி படம் என்று சொல்கிறார்கள், அதுதான் யோசிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு ஜெகதீஷ் அது ஒன்றும் பிரச்சனை இல்லை இரண்டு படமும் நன்றாக போகும் என கூறினார். இல்ல ப்ரோ நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க கடைசி படம் என்பதால் விஜய் சாரிடம் சரியாக கன்வே பண்ணுங்கள். இல்லையென்றால் நடுவில் ஏதாவது காமெடி பண்ணுவார்கள் என்று கூறினார். ஐந்து நிமிடம் கொடுங்கள் விஜய் சாரிடம் பேசி விட்டு வருகிறேன் என பத்து நிமிடம் கழித்து அழைத்து ப்ரோ விஜய் சாரிடம் பேசி விட்டேன் அவர் உங்களுக்கு வாழ்த்து சொல்ல சொன்னார். நம் சிறப்பாக பண்ணிடலாம் இரண்டு படமும் சிறப்பாக வரும் என கூறினார். இதுதான் நடந்தது. இதை முழுவதுமாக மாற்றி வேற மாதிரி பேசுவது. இதில் சிலருக்கு வன்மம் சிலருக்கு வியாபாரம். கோட் படம் பார்த்துவிட்டு விஜய் சாருக்கு கால் பண்ணினேன். கால் எடுத்து ஹாய் ப்ரோ என்று கூறினார். சார் கோட் படம் மிகவும் என்டர்டைன்மென்ட்டாக உள்ளது எனக் கூறினேன். தேங்க்ஸ் ப்ரோ எனக்கு கூறினார். எனக்கு எதுக்கு சார் நன்றி, இந்த படத்தில் உங்களோடு இருந்தது எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன தருணம் என கூறினேன்.
இல்ல இல்ல மிகவும் ஸ்வீட்டாக பண்ணி கொடுத்தீர்கள். என்னால எத்தனை முறை முடியுமோ அத்தன முறை நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று அவ்வளவு இனிமையாக சொன்னார். இதுதான் எங்கள் இருவரிடம் இருக்கக்கூடிய உறவு. இதற்கு இடையில் யார் என்ன பேசினாலும் கவலைப்படாதீர்கள் மை டியர் பிரண்ட்ஸ். ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் ஜனநாயகனை தியேட்டருக்கு செலிப்ரேட் பண்ணுங்கள். 33 வருடம் திரைத்துறையில் என்டர்டைன் பண்ணவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார் ஆகவே ஜனவரி ஒன்பதாம் தேதி அதனை நாம் கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ஆம் தேதி நம்ம படத்திற்கு வாங்க பராசக்தியை கொண்டாடுங்கள். இந்த பொங்கல் கோலிவுட்க்கு அமேசிங்கான பொங்கல். அனைவருக்கும் தெரியும் அவரவர்கள் படத்தை அவரவர் சூப்பராக கொண்டாடும் அவர்கள். இன்னும் தெளிவாக சொல்கிறேன் எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் பொறுத்தவரை இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல். புரிந்ததா அனைவருக்கும் கிளியராக புரிந்ததா..?” எனக் கூறினார்.


