“உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்”- வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் ரிப்ளை
வெங்கட் பிரபு வேற ஒரு படத்தை நம்பி இருந்தான், அதனால தான் அவன் அடுத்த படம் லேட் ஆகுது. அந்த நடிகர் யார்னு நான் பேர சொல்ல மாட்டேன், அவரை குறை சொல்ல வேணாம் அவர் வாழட்டும். வெங்கட் பிரபு கதையெல்லாம் ரெடி பண்ணிட்டான், அந்த நடிகரும் கால் ஷீட் கொடுத்துட்டார். ஆனா, அந்த நடிகரோட ஒரு படம் ஹிட் ஆன உடனே அந்த இயக்குனரோட இரண்டு படம் எடுத்துட்டு தான் அடுத்த படத்தை பண்ணுவேனனு சொல்லிட்டார். அத வெங்கட் பிரபுவுக்கு அனுப்பி இது உனக்கு தேவையா, எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் இதுக்கு மேல அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்ன உதாசினபடுத்துறான், நீயும் அவனை உதாசினப்படுத்தி அவன் படத்தை நீ பண்ணக் கூடாதுனு சொன்னேன் என அண்மையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கை அமரன் பேசியிருந்தார். அவர் நடிகர் சிவகார்த்திகேயனைதான் குறிப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியது.

இதுதொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், “சிவகார்த்திகேயன் எனக்கு எப்போதுமே நல்ல நண்பரும், சகோதரனும்தான். பல யூகங்களும் சர்ச்சைகளும் பரவி வருகின்றன. ஒரு தந்தையாக, உங்கள் சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு படம் தாமதமாகும் போது, ஏமாற்றம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது. என் வேலை என்று வரும்போது நான் மிகவும் அமைதியானவன், என் தொழில்ரீதியான விஷயங்களை அவரிடம் உட்பட யாரிடமும் விரிவாகப் பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்க முடியவில்லை. அவ்வளவுதான். எந்த வருத்தமும் இல்லை. சரியான நேரம் வந்து,ஒரு நல்ல கதை கிடைத்தால்,நான் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற விரும்புவேன். ஆகவே, தயவுசெய்து இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் என் அடுத்த வேலையில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரன் சியோனுக்கு என் நல்வாழ்த்துக்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga!
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 28, 2026
Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project 🤗
Sir, I’ve told you this before, and I’m saying it again - I’ll always be a VP fan. Waiting to collaborate with you… https://t.co/HGxdc876NC
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், “சார், நாம் ஒரு குடும்பம். இதுக்குப் போய் நீங்க சீரியஸ்-ஆ ரிப்ளை பண்ணிருக்கீங்க... உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார், உங்களின் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கும் என் நல்வாழ்த்துக்கள். சார், இதை நான் முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன் - நான் எப்போதுமே உங்கள் ரசிகனாக இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

