ஐயா சாமி... 40 நாட்களாகியும் செஞ்சி சிறுமி பற்றி துப்பு கிடைக்கல... கடைசியில் காவல் நிலையத்திற்குள்ளேயே யாகம் வளர்த்த இன்ஸ்பெக்டர்!

 
1

செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். பின்னர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முதலில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அக்டோபர் 21ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

நவம்பர் 20-ம் தேதியான நேற்றுடன் சிறுமி மாயமாகி 40 நாட்களாகும் நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், சிறுமி குறித்த உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குள்ளேயே, காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் இணைந்து கணபதி ஹோமம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

புரோகிதர்களைக் கொண்டு காவல் நிலைய அறையிலேயே யாக குண்டம் அமைத்து, சீருடையுடன் மாலை அணிந்து ஆய்வாளர் வழிபாடு நடத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையத்திற்குள்ளே காவல் ஆய்வாளர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.