90 வயதில் ஓட்டு போட வந்த பாடகி சுசீலாவிற்கு காத்திருந்த ஏமாற்றம்..!

 
1

தென்னிந்திய சினிமாவின் ‛இசையரசி' பாடகி பி சுசீலா.பத்மபூஷன், தேசிய விருது, மாநில விருதுகள் வாங்கி உள்ளார்.


தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பதற்காக 90 வயதை கடந்த சுசீலா, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இவரது தொகுதி சென்னை, மயிலாப்பூர். ஆழ்வார்பேட்டை, உதவி பொறியாளர் அலுவலகத்தில் இவரது ஓட்டுச்சாவடி உள்ளது. 90 வயதை கடந்தவர் என்பதால் தபால் ஓட்டு மூலம் இவரது ஓட்டை வாங்க சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் நேரில் வந்து ஓட்டளிக்கிறேன் என சுசீலா கூறிவிட்டார். 

அதன்படி தேர்தல் நாளன்று  மாலை 3 மணியளவில் ஓட்டளிக்க சென்றுள்ளார். அவரை காரில் இருந்து கூட கீழே இறக்காமல் உங்கள் ஓட்டு முத்திரையிடப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியாச்சு என கூறி உள்ளனர். எனது அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் அனுப்பலாம் என கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. இவரது ஓட்டை அதிகாரிகளே போட்டு அனுப்பிவிட்டார்களா அல்லது ஓட்டு போடாமல் அதை அப்படியே முத்திரையிட்டு அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. இதனால் மன உளைச்சலில் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதுபற்றி பாடகி சுசீலா கூறுகையில், ‛‛என்னுடைய இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட ஓட்டு போடாமல் இருந்தது இல்லை. எந்த ஊரில் இருந்தாலும் ஓட்டு போட வந்துவிடுவேன். 90 வயதிலும் ஐதராபாத்தில் இருந்து ஓட்டு போட சென்னை வந்தேன். ஆனால் என்னால் ஓட்டு போட முடியவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. இதைபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியவில்லை'' என தெரிவித்துள்ளார்.