பாடகி சித்ரா ஐயர் குடும்பத்தில் பெரும் சோகம்! - விபத்தில் சிக்கி சகோதரி உயிரிழப்பு..!

 
1 1

பிரபல பின்னணிப் பாடகி மற்றும் நடிகையுமான சித்ரா ஐயரின் மூத்த சகோதரி சாரதா ஐயர் (52), ஓமனில் நிகழ்ந்த மலையேற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேலாளராகப் பணியாற்றிய இவர், கடந்த ஜனவரி 2-ம் தேதி தனது குழுவினருடன் ஜெபெல் ஷாம்ஸ் பகுதியில் டிரக்கிங் சென்றபோது இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளது.இந்தத் துயரச் சம்பவத்தில் சாரதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அன்புச் சகோதரியின் மறைவு செய்தியைப் பாடகி சித்ரா ஐயர் மிகுந்த மனவேதனையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். "எங்கள் இதயம் உடைந்துவிட்டது, நாங்கள் மீளாத் துயரத்தில் இருக்கிறோம்" என அவர் பதிவிட்டுள்ளார். கேரளாவின் தாழவா பகுதியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆர்.டி. ஐயரின் மகளான ஷாரதா ஐயர், மஸ்கட்டில் வசித்து வந்தார். தந்தை ஆர்.டி. ஐயர் கடந்த 2025 டிசம்பர் 11-ம் தேதிதான் காலமானார். தந்தை மறைந்த ஒரு மாதத்திற்குள்ளேயே சகோதரியையும் இழந்துள்ள சித்ராவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஓமனில் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த இந்த விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஓமனிலிருந்து சாரதா ஐயரின் உடல் அவரது சொந்த ஊரான கேரளா, தாழவாவுக்குக் கொண்டு வரப்பட்டு, ஜனவரி 7-ம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதிதான் தனது தந்தையின் காரியங்களை முடித்துவிட்டு சாரதா மஸ்கட் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத் திரையுலகில் "சுண்டத்து செத்திப்பூவு" பாடல் மூலம் புகழ்பெற்ற சித்ரா ஐயர், தமிழிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'தெனாலி' படத்தின் மூலம் அறிமுகமானவர். பாய்ஸ், புதிய கீதை, தவசி போன்ற பல படங்களில் பாடியுள்ள அவருக்கு, திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இயற்கையை நேசித்த ஒரு பயணியின் வாழ்க்கை, அவர் நேசித்த மலைகளிலேயே முடிந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.