'அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன்' - பாடகி தீ விளக்கம்!!

 
tn

என்ஜாயி எஞ்ஜாமி பாடல் உருவான விதம் குறித்து பாடகி தீ  விளக்கமளித்துள்ளார்.

tn

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28ஆம் தேதி   நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி,  சந்தோஷ நாராயணன் இசையில் உருவான என்ஜாயி எஞ்ஜாமி பாடலை பாடகி தீ , கிடக்குழி மாரியம்மாள் ஆகியோர் இணைந்து   பாடினர்.  இதில் அறிவு பங்கேற்காதது குறித்து சமூகவலைத்தளத்தில் கேள்விகள் எழ, இப்பாடலுக்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தூங்காமல் கடுமையாக உழைத்திருக்கிறேன். நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம். கடைசியில் உண்மை தான் எப்போதும் வெல்லும் என்று  பதிவிட்டிருந்தார். பாடகர் அறிவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. அமெரிக்காவில் இருந்ததால் அறிவால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இதுகுறித்து விளக்கமளித்த இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் , எனது தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக  நான் எப்போதும் பயன்படுத்துகிறேன், எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். இந்த பாடல் குறித்து பொதுவெளியிலும், தனியாகவும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.


இந்நிலையில் பாடகி தனது சமூகவலைத்தள பக்கத்தில் , எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கி இருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் இருவரையும் குறித்து நல்லவிதமாக பேசி இருக்கிறேன். குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்களை நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன். எனது பணி குறித்து  மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் தனக்கு  சம்பந்தமும் இல்லை. இப்பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன.செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் போது அறிவு அமெரிக்காவில் இருந்த காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.  இப்பாடல் உருவாக காரணமாக இருந்த ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது நன்றி. இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்"  என்று குறிப்பிட்டுள்ளார்.