மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த சித்தராமய்யா..
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து தேசிய அளவிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார். இந்த குழு கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய – மாநில அரசுகள் உறவுகள் குறித்த தேசிய அளவிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல. அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, மாநிலங்களுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்தியாவின் வலிமையே அதன் கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் உள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் 'மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' (Inter-State Council) போன்ற ஒரு வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்புக்கு கர்நாடகா தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா குறிப்பிட்டுள்ளார்.
I have written to Hon’ble Tamil Nadu CM Shri @mkstalin expressing Karnataka’s strong support for a renewed national conversation on Union–State relations.
— Siddaramaiah (@siddaramaiah) March 3, 2026
Federalism is not a political demand - it is part of the basic structure of our Constitution. Over the years, increasing… pic.twitter.com/NPSS4lZGLA

