ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா?? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி..!
ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதியும், திருக்கல்யாணம் நவம்பர் 8ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.1000, ரூ. 2000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.