நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா? வலுக்கும் கண்டனம்..!

 
11


மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான வீரமணி ஜெயக்குமார், தௌ.சம்சீர் அகமது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட உறுப்பு அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில், 'மருத்துவக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு எதிராக ’நீட்’ என்ற நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டு, அதில் பெரும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர்த்து) நீட் எதிர்ப்புச் சிந்தனையில் உள்ளவையே!

அரசியல் கட்சிகளைத் தாண்டி மாணவர் அமைப்புகள் தனித்தனியாகவும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பும் (FSO) தொடக்கம் முதலே போராடி வருகின்றன. இந் நிலையில், கடந்த மே 3-ஆம் தேதி இந்திய அளவில் நீட் தேர்வு நடந்தபோது, அதற்கு முன்னதாகவே கேள்வித் தாள்கள் கசிந்துவிட்டதாகச் சர்ச்சை உருவாகி, அக் குற்றச்சாட்டு உண்மை என்று கண்டறியப்பட்டு, அதன் மீது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னணியில் பா.ஜ.க.வும், தேசியத் தேர்வு முகமையும் இருப்பது அம்பலப்பட்டுள்ளது.

இந்த மோசடிகளைக் கண்டித்து, கடந்த 3 நாள்களுக்கு முன்பு, சென்னை சாஸ்திரி பவன் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்ட “இந்திய மாணவர் சங்க (SFI)” மாணவர்களைக் கைது செய்தும், அவர்கள் மீது வழக்கு தொடுத்தும், அவர்களின் சட்டையைக் கிழித்தும் காவல்துறை நடந்து கொண்ட போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனைக்கு மாணவர்கள் தான் முன்னின்று போராட முடியும். அதிலும், மிகப் பெரிய அநீதியும், மோசடியும் நடந்திருக்கும் சூழலில் அதற்கெதிராகப் போராடும் மாணவர்களைச் சட்டையைக் கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் போக்கு தமிழ்நாடு அரசுக்கு உடன்பட்டதா என்பதை புதிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

எத்தனை அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், அவற்றுக்கெல்லாம் அஞ்சி ஒருபோதும் மாணவர்கள் ஒடுங்கமாட்டார்கள். இது எங்கள் பிரச்சினை மட்டுமல்ல - வருங்காலத் தலைமுறைக்குமான பிரச்சினை!

‘நீட்’டையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஒழிக்கும் வரை அறவழியில் எங்கள் போராட்டமும், அறிவு வழியில் எங்கள் பரப்புரையும் ஒருபோதும் ஓயாது!

அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்போம்!

கல்வித் துறையில் காவி - கார்ப்பரேட் மயம் ஒழிக! மாணவர் ஒற்றுமை ஓங்குக!' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.