ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

 
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷ்வா என்ற பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபல குற்றவாளியான விஷ்வா போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய போது என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டி பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது, தற்காப்புக்காக  ரவுடி விஷ்வா மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலியானதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் ரவுடி விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ரவுடி விஷ்வா மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட விஷ்வா, தன்னை காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் மனு அளித்திருந்தார். அதில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்பத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்.ஐ. தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக விஷ்வாவின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.