சினிமா உலகில் பரபரப்பு: இன்று 40 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து..!

 
1

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது.  தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தமிழ் குமரன்  உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


அப்போது பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அதோடு வரும் மே மாதம் இரண்டாம் தேதி (02.05.2026) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக  தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்த தீர்மானத்தில், “நடிகர்கள் இனி திரைப்படங்களில் நடிப்பதற்கு நேரடியாக சம்பளம் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, திரைப்படங்களின் லாபத்தில் பங்கு பெறும் வருவாய் பகிர்வு முறைக்கு முன்வர வேண்டும்.  அதாவது ஆந்திராவில் உள்ளது போல தமிழ்நாட்டிலும், தயாரிப்பாளர்களின் லாப நஷ்டத்தில் நடிகர்கள் பங்கு கொள்ள வேண்டும். 

இந்தத் திட்டத்திற்கு அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் சினிமாத்துறையைக் காப்பாற்ற முன்வர வேண்டும். நடிகர்களின் அதிகப்படியான சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், திரைப்படத் தொழிலை முறைப்படுத்தவும் மே 2ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், லாபத்தின் அடிப்படையில் நடிகர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி இன்று (மே 02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தயாரிப்பாளர் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், சுமார் 40 படங்களில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.