அமைச்சர் துரைமுருகன் வீட்டின் பின்புறம் துப்பாக்கிச்சூடு- ஒருவர் கவலைக்கிடம்

காட்பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பரை துப்பாக்கியால் சுட்ட சக நண்பரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11.03.2025 அன்று இரவு 21:30 மணியளவில் அருள்சுடர் என்பவர், எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மீது சாய்ந்தபோது, முதுகில் காயம் ஏற்பட்டதாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, 12.03.2025 அன்று மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொண்டதில், அருள்சுடரின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டு ஒன்றினை எடுத்துள்ளனர். இத்தகவலை மருத்துவமனை தரப்பில் இருந்து விருதம்பட்டு காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் காவல்துறையினர் அருள்சுடர் மற்றும் அவரது நண்பர் ஜான்சன் இருவரிடமும் மேற்கொண்ட தொடர் விசாரணையில், அருள்சுடர் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருவரின் வீட்டை வாடகை எடுத்து எலக்டிரிக்கல் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தி வந்த இடத்தில், 11.03.2025 அன்று இரவு அருள்சுடர் மற்றும் ஜான்சன் இருவரும் மது அருந்தும்போது, அருள்சுடரின் உரிமம் இல்லாத (Unlicensed) கைத்துப்பாக்கியை ஜான்சன் மதுபோதையில் கவனக்குறைவாக கையாண்டதில், எதிர்பாராதவிதமாக அருள்சுடரின் முதுகின் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் அருள்சுடர் மற்றும் ஜான்சன் இருவர் மீதும் விருதம்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜான்சன் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் பின்புறம் நடந்துள்ளது.